தந்தைப் பெரியாரின் மேதினச் செய்தி

சர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள்- ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ஆம் தேதியை “தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வருகிறார்கள்.
இரஷ்ய சமதர்ம தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோசத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக்காட்டுகிற தோரணையில் மேதினத்தை இரஷ்யாவில் கொண்டாடுகிறார்கள்.

பிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைபாடுகளைப் பகிரங்கப்படுத்திப் பரிகாரம் வேண்டுகிற முறையிலும்; தொழிலாளர்களின் சுபிட்ச வாழ்க்கை, சமதர்ம முறையாலும்,தொழில் நாயக அரசாலும் (Ergotacracy) ,அதாவது தொழிலாளர் குடி அரசாலுமே (Proletarian democracy )  சித்திக்குமெனத் தீர்மானிக்கும் முறையிலுமே “மே தினம்கொண்டாடப்படுகிறது.
இந்தியாவிலும் சில வருடங்களாக,மேதினம்இங்கொரு இடத்திலும் அங்கொரு இடத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருடத்தில் இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால், நமது தமிழ்நாட்டிலோ மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின், நமது பிரத்தியெக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது.
சுயமரியாதை வீர்ர்களே! சமதர்மிகளே! தொழிலாளர்களே! தொழிலாளர்களின் தோழர்களே! இந்த வருடத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள்தோறும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி வெகு விமரிசையாக்க் கொண்டாட வேண்டுகிறேன்.
தேசம், மதம், சாதி என்கின்ற தேசிய உணர்ச்சிகளை மறந்து, உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லாத்தேச,மத,சாதிமக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும்: தொழிலாளர் சமதர்ம ராஜ்யம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படித் தொழிலாளர்களிடையில் பிரச்சாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும் இம்முயற்சியில்  ஈடுபடவேண்டும் என்றும் தெரிவித்துக் கொள்ளுகிறேன். (குடியரசுஅறிக்கை.28.4.1935)
-    பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள்-முதல் வரிசை-தொகுதி:3,அரசியல்:2 –பக்கம் :1638 பதிப்பாசிரியர் : வே.ஆனைமுத்து.

No comments:

Post a Comment