என்னை நான் எவனுக்கும் விற்கமாட்டேன்!
என்றைக்கும் பிறன்காலை நக்கமாட்டேன்!
தன்மானம் விழத்தலை குனியமாட்டேன்!
தடியர்க்கும் கொடியர்க்கும் பணியமாட்டேன்!
கன்னத்தில் அறைவானைப் பொறுக்கமாட்டேன்!
கயவரைக் களம்காணா திருக்கமாட்டேன்!
முன்பாயும் குண்டுக்கும் ஓடமாட்டேன்!
முதுகில் புண்சமந்துகண் மூடமாட்டேன்!
என்னைப் போல என்பாடல் நிமிர்ந்து நிற்கும்!
எரிமலை நெருப்பைஎன் ஏடுகக்கும்!
பொன்பெற்று நான் பாடல் பொழிவதில்லை!
புலவன் நான் வறுமையால் அழிவதில்லை!
தின்னாமல் இருந்தாலும் சாகமாட்டேன்!
கன்னெஞ்சும் ஒன்றுண்டு!கவிதை உண்டு!
களம்கண்டு தமிழ்செய்தல் என்றன்தொண்டு!
கோலிருக்கும் வேந்தர் ஆனால் என்ன?
கொடும்படை வீரர்தான் என்றால் என்ன?
காலின்கீழ் மனிதனை மிதிப்போன் காலை!
கவிவாளால் வெட்டுதல் என்கை வேலை!
கூலியாய் தொழும்பனாய் வாழ மாட்டேன்!
கூண்டில் நான் கிளிஆகி மாளமாட்டேன்!
வேலிஇல்லா வானம் என்றன் வீடு!
விடுதலை எங்குண்டோ அது தாய்நாடு!
-உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

1 comment:
//தின்னாமல் இருந்தாலும் சாகமாட்டேன்!
கன்னெஞ்சும் ஒன்றுண்டு!கவிதை உண்டு!
களம்கண்டு தமிழ்செய்தல் என்றன்தொண்டு!//
super. i enjoyed all lines.
Post a Comment