நாளை
ஏப்ரல் 14
உன் பிறந்த நாள் விழா....
நாடாளுமன்ற கட்டிட வளாகத்தில்
சட்டமன்ற வளாகத்தில்
வழக்கமாய் வணங்கப்படுவாய்.
காங்கிரஸின் காரிய கமிட்டியின்
திண்டுகளுக்கு பின்னால்
படமாய் தொங்குகிறாய்.
இந்துத்துவத்தின்
பாஜக இரதத்தில் இராமனுக்கு
பக்கத்தில்..
உன் முகத்தில் தான் வாக்கு கேட்பும் நடக்கிறது.
இந்திய அரசியல் சட்டத்தை
குப்பை என்றாய் நீ...
எரித்தால் முதல் தீ
என்னுடையது என்றாய்..
இந்தியாவின் சட்ட சிற்பியாக
இன்னும் உன்னை தேடிக்கொண்டு இருக்கிறார்கள்.
இந்துத்துவத்தின் “மூலவர்”
சங்கராச்சாரியாரின் ஜன கல்யான் இயக்கத்தின்
பதாகையில் நாளையும் நீ சிரிக்கலாம்.
எம்பி, எம் எல் ஏ சீட்டுகளுக்காக
உன்னை
கரன்சிகளாக்கிவிட்டனர்.
அந்நோட்டுகளில் யாரை எதிரி
என்றாயோ அதே காந்தி சிரித்துக் கொண்டுதான் இருக்கிறார்.
உபியின் மகராணி
தலித் செல்வி மாயாவதியின்
கரன்ஸி 1000 ரூபாய் மாலைகளில்
நீ சிரித்துக் கொண்டு இருக்கிராய்.
பார்ப்பனியமும் முதலாளியமும்
தான் சமூக எதிரி என்று அடையாளம் காட்டினாய்.
ஆம் இவ்விரு சக்திகளும்
உன்னை உள்வாங்கிக் கொண்டன.
பேராசிரியர்கள்
சமூக ஆய்வாளர்கள்
இன்னும் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறார்கள்
உன்னின் முகமெது?
நீ எதிரி என்று யாரை அடையாளம் காட்டினாய் என்று?
நாளை
நாடாளுமன்ற கட்டிட்த்தில் இருந்து
எங்களூர் சேரி வரை
ஆண்டவனாக வணங்கப்படுவாய்...
மாற்றுக் கருத்தேதுமில்லை...

No comments:
Post a Comment