
"தமிழகத்தில் ஆட்சி மொழியாகவும், பயிற்று மொழியாகவும் தமிழ்தான் இருக்க வேண்டும் என்பதில் இப்போதும் எப்போதும் மாற்றம் இல்லை' என்று முதல்வர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். இதை வரவேற்போம். ஆனால் நிலை என்ன?
1968ல் கலைஞர் பேசியபோது என்ன நிலையோ அதே நிலைதான்.
தமிழகத்தில் தமிழில் படிப்பது வெட்கப்படக்கூடியது. கேலிக்குள்ளாகும் செயலாகும். நான் என் மகனை 10 ஆண்டுகளுக்கு முன்னால் கிராமத்தில் உள்ள ஒரு தொடக்கப்பள்ளியில் சேர்க்கச்சென்றேன். தெரிந்தே சென்றேன். ஆனால் அங்கு பணியாற்றிய ஒரு ஆசிரியை “இங்கு சேர்ப்பதைவிட அருகில் உள்ள காண்வென்டில் கொண்டு சேர்க்க சிபாரிசு செய்தார்”. இந்த நிலை இன்றும் தொடர்கிறது. அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ப்பது புத்திசாலித்தனமாகிவிட்ட்து. நகரத்தில் உள்ள தினக்கூலிக்கூட தன் சந்ததி வாழ்க்கையின் வளமாகும் என்ற கற்பனையில் கான்வென்ட் கலாச்சாரம் எல்லா வீடுகளிலும் பரவிவிட்டது. நான் குடியிருக்கும் பகுதியில் உள்ள 2வயது குழந்தை தன் அப்பாவை “டாடியோ” என்று கூப்பிடுவது தினமும் கேட்டுக் கொண்டே இருக்கிறது. அப்பா அம்மா என்பது நீச வார்த்தைகளாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணமாக ஆட்சியாளர்கள் பேச்சில் மட்டுமே கவனத்தைக் காட்டினார்களோ என நினைக்கத்தோன்றுகிறது.
இன்றும் என் மகனை தமிழ் வழியில் நான் படிக்க வைத்தாலும் பிழைக்கத் தெரியாத ஆள் என்ற ஏக்கத்துடன் மற்றவர்கள் பார்ப்பது நாளந்தம் நடக்கும் செய்தி. வாந்தி எடுக்கும் மெகாலே கல்வித்திட்டத்தின் கல்விக் கூறுகளைத்தான் அடிப்படையாக இருக்கிறது. இதனால் நாம் ஆங்கிலத்திற்கோ மற்ற மொழிகளுக்கோ எதிரானவர்கள் இல்லை. அவனவன் நாட்டில் அவனவன் வாழ்க ! என்பது போல அந்தந்த தேசிய இனம் அவர்கள் சார்ந்த மொழியிலேயே எல்லாம் கிடைக்க ஆவணச்செய்ய வேண்டும். தமிழே படிக்காமல் ஒருவன் தமிழகத்தில் பட்டம் வாங்கலாம். வேலையும் பெறலாம். தமிழ் வழியில் படித்தவன் குச்சி மிட்டாய் சாப்பிட்ட நிலைதான் இந்நிலைக்கு காரணம். தமிழ்வழியில் படிக்க அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும். தாய்மொழியில் படித்தவனுக்கு உயர்கல்வியில், அரசுப்பணிகளில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். சிறப்புச்சலுகைகள் வழங்க வேண்டும் என்று தமிழகத்தில் இருந்து நாம் குரல் கொடுப்பதே கேவலமாக அசிங்கமாக உள்ளது. இதில் திமுக மட்டும் குறைச்சொல்லமுடியாது. அனைத்து கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு உட்பட வேண்டும்.
ஆங்கிலவழி , இந்திபடித்தால் தான் வேலை போன்ற கருத்தியல்கள் தோன்ற பார்ப்பனியத்தை உயர்த்திப்பிடிக்கும் இந்துதேசியம்/இந்திதேசியம் மாயத்தோற்றத்தை வைத்து இருக்கிறது. இம்மாய தோற்றத்தை உடைக்க வேண்டும், கலைக்க வேண்டும். இதில் கலைஞரின் பங்கு மட்டுமல்ல அனைத்து அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் ஒருங்கிணைய வேண்டும். இன்று வரும் அரசானைகளில் 80 விழுக்காடு ஆங்கிலத்திலேயே வருகிறது. ஆட்சிமொழியே கேள்வியாகிவிட்டது.
தமிழகம் முன்னேற்றம் பாய்ச்சலில் செல்ல வேண்டுமென்றால், தமிழில் படிக்க முன்னுரிமை, தமிழ்வழியில் படித்தோருக்கு வேலையில் முன்னுரிமை என்பது சரியான தீர்வாக இருக்க முடியும். அனைத்து கல்வி மருத்துவம் ,பொறியியல், சட்டம், நிர்வாகம் போன்ற இடங்களில் தமிழே இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment