தாய் மொழி வழிக் கல்வியின் அவசரத் தேவை!! - முனைவர் வா.செ.குழந்தைசாமி

முனைவர் வா.செ.குழந்தைசாமி
தலைவர் & தமிழ் இணையப் பல்கலைக்கழகம்

'நாட்டுக்காக இறப்பது என்கிற பெருமையைவிட, இறப்பதற்கு ஒரு நாடு இருக்கிறது
என்கிற பெருமை உயர்வானது' என்பார்கள். 'நாடும் மொழியும் நமது இரு கண்கள்'
என்றார் பாரதியார். நாடு, மொழி, இனம் என்பதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல;
பண்பாடு, பாரம்பரியத்தின் அடையாளங்கள். தன் நாடு, தன் மொழி, தன் இனம் என்று
சொல்லிக்கொள்ளும் வாய்ப்பில்லாமல் மருகி நிற்கும் மனிதர்களின் எண்ணிக்கை பல
லட்சங்கள்.

உலகில் 6,000 மொழிகள் வழக்கில் இருக்கின்றன. அத்தனை மொழிகளில் ஆறே மொழிகள்தான்
உலகத்திற்கு நாகரிகம் சொல்லிக் கொடுத்த பாரம்பரியம் உடைய செம்மொழிகள். அவற்றில்
தமிழ், சீனம், அண்மையில் ஹீப்ரு ஆகிய மொழிகள்தான் அறிவியல் யுகத்துக்கும்
ஈடுகொடுத்து, தம்மைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கின்றன. கிரேக்கம், லத்தீன்,
வடமொழி ஆகியவை இன்று வழக்கொழிந்துவிட்டன. பாடம் கற்கிற ஊடகமாகவும்,
பயன்பாட்டுக்குரிய வாழ்க்கை மொழியாகவும் தமிழ் நமக்கு வாய்த்திருக்கும்
பெருமையை இன்னும் முழுமையாகத் தமிழர்களே உணரவில்லை. ஆனால், உலகம் நன்றாக
உணர்ந்திருக்கிறது. ஒரு மாநிலத்துக்குரிய மொழியாக இல்லாமல், பல்வேறு நாடு களில்
வாழும் தமிழர்கள் பேசும் உலக மொழியாகவே தமிழ் சர்வதேச அளவில் மதிக்கப்படுகிறது.
அதற்கு மூன்று முக்கிய உதாரணங்களைச் சொல்ல முடியும். உலகம் முழுவதும் 40 மொழி
களில் தனது ஒலிபரப்பைச் செய்கிற பி.பி.சி. நிறுவனம் இந்திய மொழிகளில் தமிழ்,
இந்தி ஆகிய மொழிகளில் மட்டும் தான் ஒலிபரப்பைத் தருகிறது. 42 மொழிகளில்
ஒலிபரப்பைத் தரும் சீன வானொலியும் இந்த இரண்டு மொழி களுக்குத்தான் பெருமை
சேர்க்கிறது. சர்வதேச மொழிகளில் நடத்தப்பட்டு வந்த யுனஸ்கோ கூரியர் பத்திரிகை
இந்திய மொழிகளில் தமிழிலும், இந்தி யிலும் மட்டுமே வெளிவந்தது.

உலக வரைபடத்தில் இன்று 60&க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ் பேசும் மக்கள்
வாழ்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே இலங்கை, சிங்கப்பூர் ஆகிய இரண்டு
நாடுகளில் தமிழ் ஆட்சிமொழி யாக இருக்கிறது. இன்று சர்வ வல்லமை பெற்றதாக
உருவாகும் இணையதளத்தில் பயன்பாட்டு மொழியாக, இந்திய மொழிகளில் தமிழ் ஏறத்தாழ
முதலிடம் வகிக்கிறது.

தாய் மொழியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு நாடும், இனமும், நூறாண்டுகள் மிஞ்சிய தொலை
நோக்கில் சிந்திப்பதும், செயல்படு வதும் நடந்தேறுகிறது. வழக் கொழிந்து போன
ஹீப்ரு மொழியை மீட்டெடுத்து, அரிச்சுவடி முதல் டாக்டர் பட்டம் வரை கல்வி
கற்கும் மொழியாக, ஆட்சி மொழியாக யூதர்கள் நவீனப்படுத்தினார்கள். ஆனால், தமிழ்
காலந்தோறும் இடையூறுகளைத் தகர்த்துத் தன்னைத் தானே காப்பாற்றி வளர்ந்து
வந்திருக்கிறது.

மேலை நாடுகளுக்கும் நம்மைப் போன்ற வளரும் நாடுகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு
இருக்கிறது. மேல் நாடுகளில் ஒரு புதிய தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப் பட்டால்,
அதன் பயன்பாடு உடனடியாகக் கடைசி மனிதன் வரை சுலபமாகச் சென்று சேர்கிறது. நம்
நாட் டில் 'போலியோ' சொட்டு மருந்தை அரசு இலவசமாகத் தந்தாலும், அதன்
முக்கியத்துவம் தெரிந்து தாமாக முன் வந்து மக்கள் பயன்படுத்தும் நிலை இன்னும்
உருவாகவில்லை. மருந்தின் விலையைவிட அதிகமான செலவு செய்து விளம்பரம் செய்ய
வேண்டியிருக் கிறது. நமது தொழில்நுட்பங்களும், கண்டுபிடிப்புகளும் இன்னமும்
வகுப் பறைகளுக்குள்ளும், சோதனைச் சாலை களுக்குள்ளுமே இருக்கின்றன. காரணம்,
பரவலான படிப்பறிவு இல்லாத சமுதாயத் தில் அறிவியல் யுகத்தின் பயன்பாடுகளைக்
கொண்டுசேர்ப்பது அவ்வளவு எளிதான செயலாக இல்லை. நம்முடைய பின் னடைவு அங்குதான்
ஆரம்பிக்கிறது.

இந்தியாவில் ஏழ்மையும் அதிகம். படிப்பறிவின்மையும் அதிகம். இரண்டும் இரண்டு
தண்டவாளங் கள். கல்வி கடைக்கோடி மனிதனை யும் சென்று சேராமல் இருப்பதற்கு
முக்கியக் காரணம் தாய்மொழி வழி யில் கல்வி இல்லை என்பதுதான்! தங்களுக்கு
ஆங்கிலம் தெரிய வில்லையே என்கிற தாழ்வு மனப் பான்மையில் வாழ்கிற நம் சமூகத்
தின் பார்வை மாறவேண்டும். தமிழ் ஆட்சி மொழியாக, அனைத்துத் துறைகளிலும்
பயன்பாட்டு மொழி யாக, அறிவியல் தொழில்நுட்ப மொழியாக முழுமையாக மாற, இன்னும்
நீண்ட தூரம் செல்ல வேண்டும். தமிழ் படித்தால் பொருளாதார உலகில், சமூக தளத் தில்
ஒரு குடிமகனுக்கு எந்த வகையிலும் தாழ்வு நிலை வராது என்கிற நிலையை
உருவாக்குவதில் நாம் வெற்றி கண்டால், வளர்ச்சியின் பாதை எளிமையாகிவிடும். பிறகு
கூடுதல் தகுதியாக எத்தனை மொழி களையும் நம்மால் பயில முடியும்.

எல்லா நாடுகளிலும், அனைவரும் எழுத்தறிவு பெற்ற நிலையை எட்டிய பின்தான்
பொருளாதார வளர்ச்சி தொடங்கியது. நமது அண்டை நாடுகளான மலேஷியா, இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ் போன்றவை, நாம் சுதந்திரம் பெற்ற கால கட்டத்தில், பொருளாதார
வளர்ச்சியில் நம்மை யத்த நிலையில்தான் இருந்தன. இன்று நம்மைவிட அவை பொருளா
தாரத்தில் பெருமளவு முன்னேறி விட்டன. காரணம், அங்கு ஏறத்தாழ அனைவருமே கல்வி
கற்றவர்களாக இருப்பதுதான். அந்நாடுகளில் தாய் மொழி வழிக் கல்வி நடைமுறையில்
இருக்கிறது. மொழியின் வளர்ச்சியும், பயன்பாடும்தான் ஒரு நாட்டு மக்களின்
வளர்ச்சியாகவும் பண்பாடாக வும் அமையும்.

தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பற்றி இங்கு குறிப்பிடவேண்டும். எனக்குத் தெரிந்து,
உலகத்திலேயே மொழிக்கென்றே ஓர் இணையப் பல்கலைக்கழகம் செயல்படுவது தமிழ் மொழிக்கு
மட்டும்தான். தமிழகத்துக்கு வெளியே பல்வேறு நாடுகளில் வாழ்கிற தமிழர்களுக்குத்
தமிழ் மொழி பொருளாதாரத் தேவையாக இல்லை. சமுதாயத் தேவையாக, பண்பாட்டுத்
தேவையாகவே இருக் கிறது. தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ் போன்ற நாடுகளுக்குப் பல
தலைமுறை களுக்கு முன்பே புலம் பெயர்ந்து சென்ற தமிழர்களின் பிள்ளைகளுக்குத்
தமிழில் பெயர் இருக்கிறது. அங்கிருக்கிற முருகன் கோயிலில் 'ஏறு மயில் ஏறி
விளையாடும் முகம் ஒன்று' என்று தொடங்கிப் பல பக்திப் பாடல்களைப் பொருள்
தெரியாமலே பாடுகிறார்கள். அவர்களுக்குத் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்று
ஆர்வம் இருக்கிறது. ஆனால், தமிழ் படிக்கும் வசதி பரவலாக இல்லை. அந்தக் குறையைத்
தீர்த்துவைக்கும் முயற்சியாகத் தமிழக அரசால் தொடங்கப்பட்டதே தமிழ் இணையப்
பல்கலைக்கழகம். இதன் மூலம் இன்று 54 நாடுகளிலிருந்து 5,000&க்கும் மேற்பட்ட
மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.

திருக்குறளின் பெருமையாக உள்ள பரிமேலழகர் உரை தொடங்கி மு.வரத ராசனாரின் எளிய
உரை வரை இணைய தளத்திலேயே அனைத்தையும் படித்து விட முடியும். பெரிய பெரிய
புத்தகங் களை அலமாரியில் அடுக்கி வைக்க வேண்டிய தேவையின்றி, அவற்றைக் குறுந்
தகடுகளாகவும் வெளியிடுகிறார்கள். சங்கப் பாடல்களில் அன்று இருந்த மலர்கள்,
பறவைகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டால், கண்ணிமைக்கும் நேரத்தில் அவை இடம்பெறும்
பாடல்களின் பட்டியலை எடுத்துவிட முடியும். இணையப் பல்கலைக்கழகத்தால் தமிழுக்கு
ஒரு பெரிய இணையதள நூலகமே கிடைத்திருக்கிறது.

நாம் கூறிய வசதிகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொள்ள அடுத்த தலை முறைக்குத்
தமிழ் தெரிய வேண்டாமா? ஒரு குழந்தை 26 ஆங்கில எழுத்துக்களை உள்வாங்கிக்
கொள்வதற்கும், 247 தமிழ் எழுத்துக்களை உள்வாங்கிக் கொள்வதற்கும் நிறைய வேறுபாடு
உள்ளது. தீக்குச்சிகளை அடுக்கி வைத்தே ஆங்கில மொழியின் எழுத்துக்களை எழுதிவிட
முடியும். தமிழில் முடியுமா? இன்று எழுத்தறிவு பெற்றவர்களுக்கும்,
பெறாதவர்களுக்கும் இருக்கிற வேறுபாடு ஒன்றுதான். எழுத்தறிவு பெற்றவர்களுக்கு
மொழியும் தெரியும்; மொழியின் வரி வடிவமும் தெரியும். எழுத்தறிவு
பெறாதவர்களுக்கு மொழி தெரியும்; ஆனால், வரி வடிவம் தெரியாது. மொழியின் வரி
வடிவத் தைத் தெரிந்துகொள்ளாமல் இருப்ப தாலேயே 'படிக்காத தற்குறி' என்கிற
அவச்சொல்லைச் சுமக்க வேண்டி யிருக்கிறது. இந்த நிலையைப் போக்க வேண்டுமானால்,
தமிழ் வரி வடிவத்தை இன்னும் எளிமையாக்க வேண்டும். தற்போது 247 தமிழ்
எழுத்துக்களை 107 குறியீடுகள் மூலம் எழுதிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு மாறாக,
அதிக பட்சம் 39 குறியீடுகளை மட்டுமே பயன்படுத்தி ஒரு எழுத்துக் கூடக் குறையாமல்
247 தமிழ் எழுத்துகளையும் எழுதமுடியும்.

சென்ற நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தில் கல்வி கற்பது என்றால், அது
மொழியைப் படிப்பதாக மட்டுமே இருந்தது. சில நீதிப் பாடல் களும், அடிப்படைக்
கணிதமும்தான் அந்தக் காலத்தில் கல்வி. இந்த அறிவியல் யுகத்தில் 25&க்கும்
மேற்பட்ட அறிவுத் துறைகளை யுனெஸ்கோ வரையறுத்திருக்கிறது. அத்தனைத் துறைகளையும்
தமிழில் படிக்கவும், புரிந்து கொள்ளவும் கலைச் சொற்களில் தொடங்கி, கல்வித்
திட்டம் வரை தமிழ் நிறைவு பெற வேண்டும்.

தமிழ்ச் சமூகத்தில் அனைவரையும் கல்வி கற்றவர்களாக மாற்ற வேண்டுமெனில் தாய் மொழி
வழிக் கல்வியும், தமிழ் கற்பதைக் கணிசமாக எளிமைப் படுத்துவதும் அவசரத் தேவை!

No comments:

Post a Comment